சோலார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் ஆனந்த் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

Update: 2020-05-29 23:18 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சோலார் பம்பு செட்டுகள்

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கு 405 சோலார் பம்பு செட்டுகளை ரூ.8 கோடியே 85 லட்சம் அரசு மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரை திறன் வரை உள்ள ஏ.சி. மற்றும் டி.சி. மோட்டார் பம்பு செட்டுகள் இதுவரை மின் இணைப்பு பெறப்படாத நீர்ப்பாசனத்திற்கான ஆதாரங்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மானியம் வழங்கப்படும்.

மானியம் பெறலாம்

அதன்படி மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன், தமிழக அரசின் 40 சதவீத மானியத்தையும் சேர்த்து மொத்தம் 70 சதவீத மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீதம் உள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். விவசாயிகள் தாங்கள் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

திருவாரூர் வருவாய் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் திருவாரூர் பவத்திரமாணிக்கத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மன்னார்குடி வருவாய் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மன்னார்குடி அந்தோணியார் தெருவில் உள்ள வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்