2-வது நாள் விமான சேவையில் தூத்துக்குடி வந்த 59 பயணிகள் 2 பேர் தனிமை முகாமில் அனுமதி

2-வது நாள் விமான சேவையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 59 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 பேர் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2020-05-29 06:51 GMT
தூத்துக்குடி, 

2-வது நாள் விமான சேவையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 59 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 பேர் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளன.

அதன்படி விமான நிறுவனங்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல தொழில் நிறுவனங்கள் மெல்ல, மெல்ல இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விமான சேவை

ஊரடங்குக்கு முன்பாக, தூத்துக்குடி-சென்னை இடையே 2 விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. இது தவிர தூத்துக்குடி-பெங்களூரு இடையேயும் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் தினமும் பரபரப்பாக செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, 2 மாதங்களுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள், ஒரு தனியார் விமானம் சென்னை-தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 2-வது நாளாக அந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தது. இந்த விமானத்தில் சென்னையில் இருந்து 59 பயணிகள் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் அதே விமானத்தில் தூத்துக்குடியில் இருந்து 60 பேர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

2 பேர் தனிமை முகாமில் அனுமதி

தூத்துக்குடிக்கு வந்த பயணிகளில் மும்பை, புனே பகுதிகளில் இருந்து வந்த 2 பேரை மட்டும், கொரோனா பரிசோதனைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள், தனிமை முகாமுக்கு அழைத்து சென்றனர்.

மற்ற பயணிகளின் கைகளில் முத்திரையிட்டு, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்