கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
பாடாலூர்,
கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
கிணறு தோண்டும் பணி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவர், புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து முருகேசன் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தொழிலாளி சாவு
* பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (50). இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அன்பழகன் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த செல்வராஜ் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி மர்ம சாவு
* பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முத்தையா (29), விவசாயி. தந்தைக்கும், மகனுக்கும் இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் கழுத்தில் துணி சுற்றிய நிலையில் முத்தையா பிணமாக கிடந்தார். தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையா, கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
* பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் எம்.பி.சி. காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). இவர் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த லாடபுரம் காலனி தெருவை சேர்ந்த எழுத்தாணி என்கிற பிரபாகரன்(27) கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனின் சட்டை பையில் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார்.
மணல் அள்ளிய 3 பேர் சிக்கினர்
*பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த சத்தியசீலன் (வயது 40), விக்னேஷ் (24), கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் (53) ஆகிய 3 பேரும் அய்யலூர் மருதையாற்றில் மணல் அள்ளி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் அள்ளிக் கொண்டிருந்த 3 பேரையும் கைது செய்தனர். இதில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே திருடிய மணலை கொண்டு ராஜாராம் மணல் குவாரி நடத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.