சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணமடைந்தார் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்
சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணமடைந்ததால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியுள்ளது.
பெரம்பலூர்,
சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணமடைந்ததால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியுள்ளது.
கொரோனா வைரஸ்
பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரசால் 139 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில், பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர்களில் 138 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசவித்த ஒரு பெண் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் குணமடைந்ததால் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வரை புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியுள்ளதால், பச்சை மண்டலத்திற்குள் இடம் பெறுகிறது.
இந்நிலையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 11 பேரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை முடிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூரில் 7 பேருக்கு சிகிச்சை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த 362 பேரில், 355 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 7 பேரில், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை முகப்பேர் அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் 49 பேரின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
உயிரிழந்த கணவன்- மனைவிக்கு கொரோனா இல்லை
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரை சேர்ந்த பாபு என்கிற மொய்தீன் புஹாரி (வயது 59) நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவி ரஹமத் பேகம்(50), மகன் அப்துல் காதர்(20) ஆகிய 2 பேரும் மயங்கி விழுந்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ரஹமத் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்துல்காதர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என்று அந்தப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இதனால், அவர்களது உடலில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.