மூலப்பொருள் தட்டுப்பாட்டால் சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை

சிவகாசியில் உள்ள சிறு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு போதிய மூலப்பொருட்கள் கிடைக்காததால் பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

Update: 2020-05-29 05:19 GMT
சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் தாலுகாவில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளது. அதில் சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 16-ந்தேதி முதல் உற்பத்தியை தொடங்கினர். இந்தநிலையில் சிறு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் தற்போது போதுமான சப்ளை இல்லை என்று கூறப்படுகிறது.

பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் பல மாநிலங்களில் இருந்து வர வேண்டி இருப்பதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இருந்த மூலப்பொருட்களை கொண்டே கடந்த சில நாட்களாக பட்டாசுகளை உற்பத்தி செய்தனர். தற்போது மூலப்பொருட்கள் வரத்து தடைப்பட்டதால் சிவகாசியில் உள்ள சில கடைகளில் அந்த பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து தடை

விருதுநகர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பல மாநிலங்களுக்கு சரக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பட்டாசு பண்டல்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சோதனை சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பட்டாசுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைத்தாலும் அதற்கான பணம் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஆர்டர்களுக்குரிய பட்டாசுகளை இங்குள்ளவர்கள் தயாரித்து அனுப்பி வைத்தாலும் அது சம்பந்தப்பட்ட மொத்த வியாபாரிகளுக்கு சென்று சேராததால் அதற்கான பணம் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு இன்னும் வந்து சேராத நிலை தொடர்கிறது. இதனால் சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் தவித்து வரும் நிலை உள்ளது.

பாதிப்பு

இதுகுறித்து சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி மீனம்பட்டி விநாயகமூர்த்தி கூறியதாவது:-

கடந்த 16-ந்தேதி முதல் சிறு பட்டாசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கின. 2 வாரங்கள் மட்டும் பணிகள் நடந்த நிலையில் தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது பட்டாசுகளை தயாரித்து அனுப்பி வைத்தாலும் போக்குவரத்து தடையால் அது மொத்த வியாபாரிகளை சென்று சேருவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அதனால் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பட்டாசு லாரிகளுக்கு எவ்வித தடையும் இல்லாமல் சென்று வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வர தேவையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்