திருச்சி-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்
திருச்சி-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.
செம்பட்டு,
திருச்சி-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.
விமான சேவை
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு கடந்த 26-ந்தேதி காலை மட்டும் விமானம் இயக்கப்பட்டது. அன்று இரவு நேர சேவையும் நேற்று முன்தினம் காலை மற்றும் இரவு நேர சேவையும் தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு மட்டும் இரவு நேர விமான சேவை தினமும் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை சென்னை-திருச்சி இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து காலை 10.45 மணிக்கு வந்த விமானத்தில் திருச்சிக்கு 20 பயணிகளும், திருச்சியில் இருந்து காலை 11.15 மணிக்கு சென்னை சென்ற விமானத்தில் 33 பயணிகளும் பயணம் செய்தனர். இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
பெங்களூருக்கு...
இதுபோல் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விமானத்தில் 71 பயணிகள் திருச்சி வந்தனர். அதுபோல் திருச்சியில் இருந்து 53 பேர் பெங்களூரு சென்றனர். பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பயணிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் சேதுராப்பட்டியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமுக்கும், தனியார் விடுதிகளிலும் தங்கவைக்கப்பட்டனர். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.