நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் மணப்பெண் விஷம் குடித்து தற்கொலை
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டதால் மணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கம்,
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டதால் மணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருமணம் நிறுத்தம்
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் வாசு. இவர் தேங்காய் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மூத்த மகள் ருத்ரா(வயது 24). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவருக்கும், தொட்டியத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்து, நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மணமகனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தெரியவந்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் ருத்ரா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
மணப்பெண் தற்கொலை
இந்தநிலையில் ருத்ராவின் திருமணம் நடைபெறுவதாக இருந்த நேற்று முன்தினம் காலை வாசுவும், அவரது மனைவி கவிதாவும் வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ருத்ரா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். வேலை முடிந்து மதியம் வீடு திரும்பிய பெற்றோர் அவர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை எழுப்பி விசாரித்தபோது, விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளிலேயே மணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.