சின்ராஜ் எம்.பி. அறையை அ.தி.மு.க.வினர் முற்றுகை; நாமக்கல்லில் பரபரப்பு

தவறான குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. மீது சுமத்தியதாக கூறி சின்ராஜ் எம்.பி. அறையை அ.தி.மு.க.வினர் முற்றுகை முற்றுகையிட்டனர்.

Update: 2020-05-29 02:43 GMT
நாமக்கல்,

நாமக்கல் பயணியர் மாளிகையில் சின்ராஜ் எம்.பி. ஓய்வு எடுத்த அறையை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி குடிநீர் குழாய்களை பதித்து இருப்பதாக எம்.பி. தன் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தியதாக பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆவேசத்துடன் கூறினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.பி.சின்ராஜ். இவர் ஒவ்வொரு நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார். சின்ராஜ் எம்.பி. வருவதை அறிந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். அவர்கள் நாமக்கல்லில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தபோது எம்.பி. எங்கே சென்றார்? என கேள்வி எழுப்பினர். மேலும் ஆய்வு கூட்டம் நடத்திய எம்.பி.யை முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் சின்ராஜ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகிறேன். அதில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வு முடிவில் முழுமையான விவரத்தை தருகிறேன். நான் என்ன மருத்துவ உபகரணம், எவ்வளவு விலைக்கு வாங்கினேன் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பேன். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்க முன் வருவார்களா?

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தனது வீட்டிற்கு விதிமுறைகளை மீறி 2 இன்ச் அளவில் குடிநீர் குழாய் பதித்து இருப்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். என்னை முற்றுகையிட முயன்றது பொதுமக்கள் இல்லை. அவர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து நாமக்கல் பயணியர் மாளிகைக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், வேண்டுமென்றே எம்.பி. தன் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார் எனக்கூறி ஆவேசத்துடன் அவர் தங்கி இருந்த அறையை தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். அப்போது அ.தி.மு.க.வினர், தவறான தகவலை வெளியிட்ட எம்.பி. மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

பின்னர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எம்.பி. தவறான தகவலை வெளியிட்டு வருகிறார். என்னை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கி வருகிறேன். தற்போது கூட 2,500 பேருக்கு நிவாரணம் வழங்கிவிட்டு வருகிறேன். ஆனால் எம்.பி., 50 நாட்கள் எங்கே போனார்? அவரது அதிகாரத்தை பயன்படுத்தி என்ன நிதியை இந்த தொகுதிக்கு வாங்கி வந்தார் என்பதை சொல்லட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நகராட்சி ஆணையாளரை வீட்டிற்கு அழைத்த எம்.எல்.ஏ. குடிநீர் குழாய்களை அளவீடு செய்து விதிமுறை மீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என கூறினார். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா தலைமையில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் எம்.எல்.ஏ. வீட்டில் இருந்த குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்கு பின்னர் ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா பொதுவாக வீடுகளுக்கு ¾ இன்ச் அளவு கொண்ட குழாய்களே பதிக்கப்படுகிறது. அதன்படி எம்.எல்.ஏ. வீட்டிலும் ¾ இன்ச் அளவு கொண்ட குழாயே இருப்பதாகவும், விதிமுறை மீறல் எதுவும் இல்லை எனவும் கூறினார். 

மேலும் செய்திகள்