மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 1,364 பேர் வந்தனர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 1,364 பேர் நேற்று வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2020-05-29 02:32 GMT
நெல்லை, 

மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 1,364 பேர் நேற்று வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களும் ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள், அங்கு தங்கியிருந்து வேலை மற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.

சிறப்பு ரெயில்

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பஸ், ரெயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அவர்கள் கார், வேன் போன்ற வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, அதிக பணம் செலவழித்து சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ஏராளமானோர் நெல்லைக்கு சிறப்பு ரெயில் மூலம் அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு ரெயில் மும்பையில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை 3.15 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

1,364 பேர்

அந்த ரெயிலில் மொத்தம் 1,364 பேர் வந்தனர். அவர்களில் 751 பேர் நெல்லையை சேர்ந்தவர்கள். இதுதவிர தூத்துக்குடியை சேர்ந்த 183 பேரும், தென்காசியை சேர்ந்த 133 பேரும், விருதுநகரை சேர்ந்த 86 பேரும், கன்னியாகுமரியை சேர்ந்த 67 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 144 பேரும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் சிறப்பு பஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பேட்டை ராணி அண்ணா கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி விடுதி, நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கொரோனா பரிசோதனை

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து தனிமைப்படுத்தப்படுவர். தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள 4 முகாம்களிலும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்