உற்பத்தி செய்தும் வாங்க ஆள் இல்லை: ஊரடங்கு தளர்ந்தாலும் உடைந்த மண்பானை தொழில் தொழிலாளர்கள் திண்டாட்டம்
ஊரடங்கு தளர்ந்தாலும் மண்பாண்ட தொழில் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் திண்டாடி வருகிறார்கள்.
நெல்லை,
ஊரடங்கு தளர்ந்தாலும் மண்பாண்ட தொழில் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் திண்டாடி வருகிறார்கள்.
மண்பாண்ட தொழிலாளர்கள்
கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அனைத்து தரப்பிலும் பொருளாதாரத்தை நசுக்குவதுடன், ஏழை தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 4-வது கட்டமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு படிப்படியாக ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் ஆர்வத்துடன் தங்களது பணிகளை தொடர்ந்தனர். இதேபோல் மண்பாண்ட தொழிலாளர்களும் தங்களது பணிகளை வேகமாக செய்தனர். பானைகள், பூந்தொட்டிகள், ஜாடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மண்பாண்டங்களை உற்பத்தி செய்தனர்.
வாங்க ஆள் இல்லை
ஆனால், உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊரடங்கு தளர்ந்த போதிலும் மண்பானை தொழில் உடைந்த நிலையில் உள்ளது. உற்பத்தி பொருட்களை விலை கொடுத்து வாங்கினால்தான், இவர்களது கைக்கு பணம் வந்து வறுமை நீங்கும் நிலையில் உள்ளனர். ஆங்காங்கே உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி பொருட்களை குவித்து வைத்து விற்பனைக்காக காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நெல்லை குறிச்சியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் முருகன் கூறியதாவது:-
திண்டாட்டம்
மண்பாண்ட தொழிலில் காலநிலைக்கு ஏற்ப தேவையான பொருட்களை தயார் செய்வோம். கோடை காலத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள், சீசா, ஜாடி, பாட்டில், கூஜா போன்ற வடிவங்களில் தயார் செய்வோம். நடப்பு கோடை காலத்தில் எங்களது தொழில் முழுமையாக முடங்கி விட்டது. கோடை காலம் முடிவடையும் தருவாயில் அனுமதி கொடுத்த உடன் மண்பாண்டங்களை உற்பத்தி செய்தோம். ஆனால் அதனை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் திண்டாடி வருகிறோம்.
மழை காலத்தில் செடிகளை வளர்ப்பதற்கு தேவையான தொட்டிகள், நர்சரி பண்ணைக்கு தேவையான தொட்டிகள், பாசனத்துக்கு பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் தயார் செய்து கொடுப்போம். கார்த்திகை மாதம் அகல்விளக்குகள், தை மாதம் பொங்கல் பானைகள் என செய்து விற்பனை செய்வோம்.
ஏற்றுமதி
மேலும் வெளிநாடுகளிலும் நெல்லையை சேர்ந்த மண்பாண்டங்களுக்கு மவுசு அதிகம். இதனால் பல்வேறு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். உள்ளூர் வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளை சேர்ந்த வியாபாரிகளும் எங்களது தயாரிப்புகளை வாங்குவதற்கு தற்போது தயாராக இல்லை.
கொரோனாவுக்கு முன்பு மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு 4 கன்டெய்னர்களில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றப்பட்டது. ஆனால், கொரோனாவால் முடங்கி கிடந்தது. தற்போது தளர்வால் மீண்டும் அந்த கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், புதிய ஆர்டர் எதுவும் வெளிநாட்டினர் தரவில்லை.
நிவாரணம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 38 கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வந்தோம். தற்போது அவை 8 ஆக குறைந்து விட்டது. 3,500 தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் தருவதாக கூறினார்கள். அதுவும் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களிலேயே 85 சதவீதம் பேருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
எனவே, மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதுடன், மண்பாண்டங்களை விற்பனை செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு ஆர்டர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.