பல்வேறு பகுதிகளில் இருந்து விமானத்தில் கோவை வந்த 10 பேருக்கு கொரோனா

பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு பெண் மட்டும் கோவையை சேர்ந்தவர், மற்றவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

Update: 2020-05-29 00:22 GMT
கோவை,

நாடு முழுவதும் உள் நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் மூலம் கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் முதல் நாளில் சென்னையில் இருந்து கோவை வந்த ஓட்டல் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

10 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 303 பேர் கோவை வந்தனர். இவர்கள் அனைவருக்கும் விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவை அன்னூரை சேர்ந்த பெண் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அன்னூரை சேர்ந்த பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னை சென்றார். அதன் பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கோவை வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் தவிர நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கூத்தம்பாளையம் பகுதியில் துக்கம் விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த தந்தை, மகன், ஈரோடு கொடுமுடியை சேர்ந்த ஒருவர், சேலத்தை சேர்ந்த ஒருவர், திருச்சியை சேர்ந்த 5 பேர் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதில் அன்னூரை சேர்ந்த பெண் மட்டும் கோவையில் உள்ளார். மற்ற அனைவரும் அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பரிசோதனை முடிவுகள் அந்தந்த மாவட்ட சுகாதார துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்