திருவையாறு அருகே, முன்விரோதத்தில் லாரி மெக்கானிக் அடித்துக்கொலை போலீசார் விசாரணை
திருவையாறு அருகே முன்விரோதத்தில் லாரி மெக்கானிக் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு,
திருவையாறு அருகே முன்விரோதத்தில் லாரி மெக்கானிக் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மெக்கானிக் அடித்துக்கொலை
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் குணசீலன்(வயது 25). இவர், தனியாருக்கு சொந்தமான லாரி செட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த 3 பேர் முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் சரமாரியாக குணசீலனின் தலையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) புகழேந்தி, நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரும்பு கம்பியால் குணசீலனை தாக்கிய 3 மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக லாரி மெக்கானிக் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.