முத்தூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் வீடுகளின் ஓடுகள் சேதம்

முத்தூர் அருகே பலத்த சூறாவளி காற்றுடன் இடி-மின்னலுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் வீடுகளின் மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் அடைந்தன.

Update: 2020-05-28 22:27 GMT
முத்தூர்,

முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் கடந்த 2 மாத காலமாக கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கத்திரி வெயில் எனப்படும் அக்னி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இருப்பினும் கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக உலகின் மிகப்பெரிய கொடிய நோயான கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதிகளில் பகல் நேரங்களில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் உக்கிர தாக்கத்தினால் கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் கணிசமாக சரிந்து வருகிறது. மேலும் ஒரு சில கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் இரவு நேரங்களிலும் வெயிலின் அனல் காற்றினால் நகர, கிராம பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் முத்தூர் நகர, கிராம பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.

வீடுகளின் ஓடுகள் சேதம்

மேலும் மழை தொடங்குவதற்கு முன்பு பலத்த காற்று வீசியதால் நகர, கிராம பகுதிகளில் செடி கொடிகள், மரங்களின் இலைகள் அதிக அளவில் கீழே உதிர்ந்து விழுந்தது. மேலும் கிராம பகுதிகளில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும் கிராம பகுதிகளில் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன்படி முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செல்வக்குமாரகவுண்டன்வலசு, செல்வக்குமாரகவுண்டன்வலசு காலனி ஆகிய 2 கிராமங்களிலும் ஆலங்கட்டிகள் வீடுகளின் மேல் விழுந்து ஓடுகள் உடைந்து சிதறி உள்ளேயே விழுந்தன.

ஆலங்கட்டிகள் வீட்டின் மேலே விழத்தொடங்கியதும் கிராம பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்து பார்த்த போது அவர்கள் மேலேயும் பெரிய அளவிலான கட்டிகள் தலை, தோள்பட்டை பகுதிகளில் விழுந்தது. இதில் அந்த கிராமங்களை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள், பெண்கள் லேசான காயம் அடைந்தனர். இதில் ஒருசிலர்முத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆனால் முத்தூர் கிராம பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை நகர பகுதிகளில் போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் நத்தக்காடையூர் நகர, கிராம பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரம் சூறாவளி காற்றுடன் மிதமான மழையே பெய்தது. 

மேலும் செய்திகள்