6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 விடைத்தாள்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் பணிக்கு வருபவர்களை நுழைவு வாயில் அருகே வெப்பமானி(தெர்மல் ஸ்கேனர்) மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்து, அதன்பின் அவர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசங்களும் வழங்கப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
புதுக்கோட்டை செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணி புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 2 மையங்களிலும் என மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்களில் நடக்கிறது. 1,250 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. ஜூன் மாதம் 9-ந் தேதி இப்பணிகள் முடிவடையும்.
கண்காணிப்பு கேமராக்கள்
சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு அறைக்கு 8 பேர் வீதம் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அறைகளும் கிருமிநாசினி கொண்டு 2 முறை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தால் 3 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள உள்மாவட்டங்களில் இருந்து 398 ஆசிரியர்கள் 19 பஸ் வழித்தடங்கள் மூலமும், வெளிமாவட்டங்களில் இருந்து 112 ஆசிரியர்கள் 4 பஸ் வழித்தடங்கள் மூலமும் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கட்டாயம் முக கவசம் அணிந்திடும் வகையில், ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 3 முக கவசங்கள் வழங்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு உதவிட ஏதுவாக அனைத்து மையங்களிலும் தன்னார்வ ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஊரடங்கில் மூடப் பட்டிருக்கும் பள்ளிகளை அரசு அறிவிப்பு வந்த உடன் திறந்து வகுப்புகள் நடத்த அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி கண்காணிக்கப்படுகிறது.