புதுக்கோட்டையில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது
புதுக்கோட்டையில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கைது
புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் கண்ணன் (வயது 34). இவர் நேற்று முன்தினம் தட்சிணாமூர்த்தி மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த புதுக்கோட்டை செல்லப்பா நகரை சேர்ந்த ராஜேந்திரன் (42), மாப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த கோபால் (32) ஆகியோர் போலீஸ்காரர் ராஜேஷ்கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரின்பேரில் அவரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தகராறு செய்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், கோபால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார். கைதான கோபால் கூலித்தொழிலாளி என்றும், ராஜேந்திரன் வேலைக்கு எதுவும் செல்லவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை
*புதுக்கோட்டை அருகே மாங்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவருடைய மனைவி சரசு (வயது 55). புலம் பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, மாங்கணாம்பட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. நல்லுசாமி குடிபோதைக்கு அடிமையானவர் என்றும், இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தங்கி வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வாழ்க்கையை வெறுத்த சரசு நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*கீரனூரை அடுத்துள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(22). இவருக்கு நெஞ்சுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
*முள்ளூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70) எலி மருந் தை(விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார்.
கிணற்றில் விழுந்த பசுமாடு
*மாத்தூர் அருகே உள்ள தொண்டைமான்நல்லூரை சேர்ந்தவர் ராஜராஜன் (வயது 50). தனியார் தொழிற்சாலை காவலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த இருதயராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜராஜனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜராஜன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*அன்னவாசல் அருகே உள்ள மரிங்கிப்பட்டியை சேர்ந்தவர் அழகு. இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதி வயலில் உள்ள 80 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
பெண்ணை தாக்கியவர் கைது
* புதுக்கோட்டை வடக்கு 4-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை தாக்கியதாக செந்தில்குமாரை, கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர்.
* புதுக்கோட்டை மாங்கணாம்பட்டியில் வீரய்யா என்பவர் வீட்டின் அருகே சூதாடிய சிலரை தட்டிக்கேட்ட போது, வீரய்யாவை ராஜேந்திரன் தாக்கியதாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
*காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் 4-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
*புதுக்கோட்டை டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் சரவணன். இவரை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பெண் போலீஸ் ஒருவர் மீது இரு சக்கர வாகனத்தை கொண்டு ஏட்டு மோதியதாகவும், ஏற்கனவே அவர் மீது விசாகா கமிட்டியில் அப்பெண் போலீஸ் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
*கந்தர்வகோட்டை அருகே தைலமரக்காட்டில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக் கப்பட்டன. இந்த நிலையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
*விராலிமலை பகுதியில் வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்களில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 79 பேரும், பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 பேரும் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அவர்கள் வேன்களில் திருச்சி மற்றும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் அறந்தாங்கி தாலுகா பகுதியில் வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் 57 பேரை, அவர்களது சொந்த ஊருக்கு வருவாய்த்துறையினர் நேற்று அனுப்பி வைத்தனர். இதில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 39 பேர் மதுரையில் இருந்தும், பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 பேர் திருச்சியில் இருந்தும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், ஈரோட்டில் இருந்தும் ரெயில் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
*விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
*காரையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, வெள்ளாளபட்டியில் பருத்திக்காட்டில் சாராய ஊறல் போட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து வெள்ளாளபட்டி பொன்னுச்சாமியும், பால்ராஜ் ஆகியோர் மீது காரையூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
*விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே சாலையோரத்தில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த ஆலமரம் நேற்று மாலை அப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் திடீரென முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.