சிவகாசியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி கலெக்டர் ஆய்வு
சிவகாசியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
சிவகாசி,
சிவகாசி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. சிவகாசி எஸ்.எச்.என். மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எச்.என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செண்பகவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் நடைபெற்றது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டனர். விடைத்தாள் திருத்தம் நடைபெறும் 3 பள்ளிகளும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் சிவகாசி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவகாசி எஸ்.எச்.என். பள்ளிக்கு வந்த கலெக்டர் கண்ணன் விடைத்தாள் திருத்தும் பணியை ஆய்வு செய்தார். அவருடன் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, சிவகாசி தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் உடன் வந்தனர்.