அரியமங்கலத்தில் மளிகை கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு
திருச்சி அரியமங்கலத்தில் மளிகை கடைக்காரரிடம் ரூ.1½ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி அரியமங்கலத்தில் மளிகை கடைக்காரரிடம் ரூ.1½ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.1½ லட்சம் பறிப்பு
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவர் தனது வீட்டுடன் சேர்த்து மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 6.45 மணிக்கு அப்துல் சலாமின் வீட்டிற்கு முககவசம் அணிந்த ஒருவர் வந்து சில்லறை கேட்டுள்ளார்.
அவர் சில்லறை எடுக்க முயன்ற போது, அவரை கீழே தள்ளி விட்டு, அவர் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை அந்த மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தற்கொலை
* துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜின் மகள் ஷாலினி(வயது 19). இவர் குடும்ப பிரச்சினையால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* கூத்தைப்பார் பேரூராட்சியை சேர்ந்த பெட்டிக்கடைக்காரர் முத்துக்குமாரிடம்(35) பணம் கேட்டு மிரட்டியதாக திருச்சி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பாலுவை (41) திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
* திருவெறும்பூர் அடுத்த கீழக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த புஷ்பகாந்தி (68) நேற்று மாட்டுத்தொழுவத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தீக்காயமடைந்த பெண் சாவு
* அரியமங்கலம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி தீபா(20). கர்ப்பிணியான இவர் கடந்த 10-ந்தேதி சமையல் செய்த போது மண்எண்ணெய் அடுப்பு வெடித்து தீக்காயம் அடைந்தார். சிகிச்சையில் இருந்த அவருக்கு கடந்த 17-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த குழந்தை இறந்துவிட்டது. இந்தநிலையில் தீபாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலைப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தீபாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் டிரைவர் பலி
* லால்குடி அருகே உள்ள தென்கால் பகுதியை சேர்ந்த டிரைவர் இளமுரு(33) ஜீயபுரம் அருகே கொடியாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவர் மீது வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி டிரைவர் சாவு
* மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி(59) கல்லக்குடி அருகே சிமெண்டு ஆலையில் இருந்து செங்கல் ஏற்றுவதற்காக காத்திருந்தார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை லாரி செட் மேலாளர் தனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். வரும் வழியில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் பறித்த 4 பேர் கைது
* திருச்சி பிள்ளைமாநகர் எடத்தெருவை சேர்ந்தவர் குணசீலன்(37). இவர் அப்பகுதியில் டீக்கடை முன்பு நின்ற போது, அவரிடம் இருந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றதாக, அதே பகுதியை சேர்ந்த அன்சாரி(20), லாரன்ஸ் ஆரோக்கியதாஸ்(25), அப்பாஸ்(20), சிவக்குமார் ஆகிய 4 பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.
கத்திக்குத்து
* திருச்சி பாலக்கரை கூனிபஜார் பகுதியை சேர்ந்தவர் வீரமணி(30). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர் கார்த்திக்குடன் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த விக்ரம்(20), சாமுவேல்(20) ஆகியோர் கத்தியால் வீரமணியை தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் விக்ரம், சாமுவேல் ஆகியோர பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
* திருச்சி தென்னூர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் செய்யது முஸ்தபா(46). பழவியாபாரி. இவர், தென்னூரில் டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது, வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த விஜய்(19) என்பவர், கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
பெயிண்டர் தற்கொலை
* திருச்சி மன்னார்புரம் காஜாமலை காலனியை சேர்ந்த பெயிண்டர் வேல்மாறன்(27) கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெயில்வே காலனியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* திருச்சி ராமலிங்காநகர் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சீனிவாசாநகரை சேர்ந்த சந்திரசேகரனை(48) உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாலிபர் தற்கொலை
*துவரங்குறிச்சியை அடுத்த ராசிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(35). இவருடைய மனைவி சரஸ்வதி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சரஸ்வதி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். தான் அழைத்து மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த முத்துச்சாமி வீட்டின் பின்பகுதியில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் மேலும் ஒருவர் சாவு
* புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த புரோஸ்கான், தீன் முஹம்மது, தவ்பீக் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மணப்பாறையில் இருந்து புத்தாநத்தம் நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானார்கள். இதில் சம்பவ இடத்திலேயே புரோஸ்கான் உயிரிழந்தார். இந்த விபத்தில் தவ்பீக் படுகாயமடைந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி சாவு
* திருச்சி ஏர்போர்ட் சத்யா நகர் பகுதியில் தனியாக வசித்து வந்த அனுசியாவின் (71) வீட்டு கதவு கடந்த 3 நாட்களாக திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏர்போர்ட் போலீசார் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அனுசியா இறந்து கிடந்தார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி சாவு
* திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சங்கர்(40) நேற்றுமுன்தினம் அதிக போதையில் திருச்சி-மதுரைரோட்டில் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பு உட்கார்ந்து இருந்த நிலையிலேயே இறந்து இருந்தார். தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முத்துராஜா, செல்வம், திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, எலிமருந்து வைத்து இருந்த 9 கடைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(35) தோட்டத்துக்கு மருந்து அடிக்க சென்றுவிட்டு வந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* திருச்சி தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்தவர் ஜான்பாஷா தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஆழ்வார்த்தோப்பு பாலம் அருகே வந்த போது 2 பேர் கல்லால் ஆட்டோ கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு தப்பிச்சென்றனர். இதில் ஜான்பாஷா காயம் அடைந்தார்.
* திருச்சி குப்பாங்குளம் கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த வாழைப்பழ வியாபாரியான சுரேந்திரனை (வயது 35) அதேபகுதியை சேர்ந்த அருண்மணி தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் அருண்மணி, சிவா, ஆனந்த் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 6 பேரை கைது செய்தனர்.