அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ ; கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-05-28 03:21 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றது. ஒவ்வொரு தளர்வின்போதும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் கைகளை கழுவ தேவையான அமைப்புகள் அல்லது கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஒரு சில வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதது, தெரியவந்து உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு அறிவுரை குறித்து பொதுமக்களும், வணிகர்களும் அலட்சியமாக இருப்பது மீண்டும் கொரோனா பரவ வழிவகுக்கும். இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்த வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, வணிகவரித்துறை ஆகிய துறை அலுவலர்கள் இணைந்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஆய்வுகளில் முக கவசம் அணியாத நபர்கள் கண்டறியப்பட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய கட்டுப்பாடுகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு முதல் தடவை ரூ.500 அபராதம் விதிக்கவும், மீண்டும் தொடர்ந்து கடைபிடிக்க தவறினால் அந்த நிறுவனம் அல்லது கடை மூடி ‘சீல்’ வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்