ஊரடங்கால் பாதிப்பு: 2 மாதத்துக்கு முன் தள்ளிவைக்கப்பட்ட திருமணம் எளிமையாக நடந்தது

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

Update: 2020-05-28 03:20 GMT
திருச்சி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதேவேளையில் திருமண மண்டபங்களும் மூடப்பட்டன. இதனால், நிச்சயித்த தேதியில் நடக்க வேண்டிய திருமணங்களும் தள்ளிபோனது. சிலர், எளிமையாக வீடுகளிலேயே உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

இந்தநிலையில் திருச்சி பாலக்கரை ஜெயில்பேட்டையை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி ராஜசேகருக்கும், அதே பகுதியை சேர்ந்த பி.காம் பட்டதாரி ஜெயசுதாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமண தேதி நிச்சயமானது. திருமண மண்டபமும் முன்பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவர்களின் திருமணமும் தள்ளிவைக்கப்பட்டது.

கடந்த 2 மாதமாக ஊரடங்கால் நின்றுபோன இந்த திருமணத்தை நேற்று மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலருடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாலக்கரையில் உள்ள ஸ்ரீஅங்கயர்கன்னி மாரியம்மன் கோவிலில் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது. மணமக்கள் இருவரும் முக கவசங்கள் அணிந்தபடியே மாலையை மாற்றிக்கொண்டனர்.

இதுகுறித்து மணமக்கள் வீட்டார் தரப்பில் கூறுகையில், ‘கடந்த 2 மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும். ஊரடங்கால் வேறுவழியின்றி தள்ளி வைக்கப்பட்டது. இனியும் தள்ளி வைக்க வேண்டாம் என நினைத்து உறவினர்கள் சிலரை வரவழைத்து கோவிலில் இருவருக்கும் திருமணத்தை முடித்து விட்டோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்