குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது 1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு
குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. முதல் நாள் 3 மையங்களில் நடந்தது. 1,250 ஆசிரியர்கள் இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்கின்றனர்.
நாகர்கோவில்,
குமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. முதல் நாள் 3 மையங்களில் நடந்தது. 1,250 ஆசிரியர்கள் இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்கின்றனர்.
கொரோனா பரவல்
ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும். பின்னர் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளதால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்னும் நடைபெறவில்லை. பிளஸ்-1 மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. வருகிற ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும்போது பிளஸ்-1 மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
மேலும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் பள்ளி, திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, படந்தாலுமூடு திருஇருதய மேல்நிலைப்பள்ளி என 4 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
விடைத்தாள் திருத்துவதற்கான வசதிகள் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு வந்தன. நேற்று காலை விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. முதல்நாளான நேற்று முதன்மை தேர்வாளர்கள் 162 பேரும், கூர்ந்தாய்வு அலுவலர்கள் 162 பேரும் என மொத்தம் 324 பேர் மட்டும் நாகர்கோவில் டதி பள்ளியை தவிர மற்ற 3 மையங்களில் விடைத்தாள்களை திருத்தினர்.
முதன்மைக்கல்வி அதிகாரி ஆய்வு
குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் விடைத்தாள் திருத்தும் மையங்களின் முகாம் அலுவலராக இருந்து விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணித்தார். முதலில் அவர் ஆசாரிபள்ளம் பெல்பீல்டு பள்ளி மையத்திலும், பின்னர் படந்தாலுமூடு, திருத்துவபுரம் மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் கூறியதாவது:-
1,250 ஆசிரியர்கள்
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களாக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்போது ஒரு மையம் கூடுதலாக இருக்கும். அதாவது மார்த்தாண்டம் வெட்டுமணி என்.வி.கே.எஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியும் ஒரு மையமாக இருக்கும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் 1,250 பேர் ஈடுபட உள்ளனர். இவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் இந்த பணியை மேற்கொள்வார்கள். முதன்மைத்தேர்வாளர்கள் 162 பேர், கூர்ந்தாய்வு அலுவலர்கள் 162 பேர் என மொத்தம் நேற்று 324 பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைத்து பாடங்களுக்குரிய விடைத்தாள்களில் இருந்து தலா 12 விடைத்தாள்கள் வீதம் திருத்தினார்கள்.
9-ந் தேதி நிறைவு
இன்று முதல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திருத்தும் விடைத்தாள்களை 324 பேரும் சரிபார்ப்பார்கள். ஆசிரியர்கள் சரியாக திருத்தி உள்ளார்களா? அனைத்து கேள்விகளுக்குமான விடைகளை சரிபார்த்து மதிப்பெண் அளித்துள்ளார்களா? என பார்த்து இந்த 324 பேரும் கையெழுத்திடுவார்கள். 2-வது நாளான இன்று மதியம் வரை மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். அதனால் 12 விடைத்தாள்கள் மட்டும் திருத்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் அளிக்கப்படும். நாளை மறுநாள் முதல் காலை 12 விடைத்தாள்களும், மதியத்துக்கு பிறகு 12 விடைத்தாள்களும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்படும்.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி வருகிற ஜுன் மாதம் 9-ந் தேதி நிறைவடையும். 10-ந் தேதி முதல் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். முதல் நாளான நேற்று நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவில்லை. குறைவான ஆசிரியர்கள் என்பதால் பெல்பீல்டு பள்ளியில் அமைந்துள்ள மையத்தில் திருத்தினார்கள்.
160 அறைகளில் பணி
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் முதலில் கை கழுவ வசதியாக ஒவ்வொரு மையத்திலும் கை கழுவும் திரவம், தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி ஆசிரியர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒவ்வொரு வகுப்பறையிலும் 2 பேர் இருந்தார்கள். இன்று முதல் 8 ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்களில் 6 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். 2 பேர் அவர்கள் திருத்துவதை சரிபார்ப்பார்கள்.
ஒவ்வொரு மையத்திலும் 40 அறைகளில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். 4 மையங்களிலும் 160 வகுப்பறைகளில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். உள்ளாட்சி அமைப்புகள் உதவியோடு காலை, மாலை நேரங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 3 முகக்கவசம் வழங்கப்படுகிறது. அதை ஆசிரியர்கள் சலவை செய்து மாற்றி, மாற்றி அணிந்து கொள்வார்கள். ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக சானிடைசர் பாட்டில்கள் வழங்கப்படும். அவை தீர்ந்துபோனால் தேவைக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும். எனவே அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் கூறினார்.