நாகர்கோவிலில் இருந்து 1,054 பேர் உத்தரபிரதேசம் சென்றனர் தனி ரெயிலில் வருவாய் அதிகாரி அனுப்பி வைத்தார்
நாகர்கோவிலில் இருந்து உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 1,054 பேர் தனி ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை வருவாய் அதிகாரி ரேவதி அனுப்பி வைத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் இருந்து உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 1,054 பேர் தனி ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை வருவாய் அதிகாரி ரேவதி அனுப்பி வைத்தார்.
வெளிமாநில தொழிலாளர்கள்
குமரி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து குமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் குமரி மாவட்டத்தில் இருந்து தனி ரெயில்கள் மூலமாகவோ, நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் செல்லும் ரெயில்கள் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அதன்படி பீகார் மாநில தொழிலாளர்கள் 957 பேர், ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் 334 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 554 பேர், மராட்டியத்தை சேர்ந்த 37 பேர், ஒடிசா தொழிலாளர்கள் 363 பேர், மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள் 156 பேர் என மொத்தம் 2,401 பேர் குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு லக்னோ செல்லும் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
1,054 பேர்
அதாவது, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 243 பேரும், நாகர்கோவில் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 259 பேருமாக மொத்தம் 502 பேர் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அரசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில் போன்றவை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
இதேபோல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் 241 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 311 பேரும் என 552 பேர் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த 3 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 1,054 பேர் தனி ரெயிலில் ஏற்றப்பட்டனர்.
உற்சாகத்தோடு...
பின்னர் அந்த ரெயில் மதியம் 1.52 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்டது. ரெயிலை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், தாசில்தார்கள் வினோத் (புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்), அப்துல்லா மன்னான் (அகஸ்தீஸ்வரம்), கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரெயில் புறப்பட்டதும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் சொந்து ஊருக்குச் செல்லும் மகிழ்ச்சியில் உற்சாகத்தோடு கைகளை அசைத்தவாறு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் மதுரையில் இருந்து 546 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 310 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 200 பேரும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 36 பேரும் ஏறிச் சென்றனர். அந்த வகையில் இந்த ரெயிலில் 1,600 பேர் பயணம் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உணவு பொருட்கள்
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய தலைவர் வக்கீல் ராபர்ட் புரூஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரெட், பிஸ்கட் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தனர்.