கொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்
ஆரல்வாய்மொழியில் கொரோனா பரிசோதனைக்காக மணமகன் 4 மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் கொரோனா பரிசோதனைக்காக மணமகன் 4 மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணம்
வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்குள் நுழையும் நபர்கள் ஆரல்வாய்மொழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவ்வாறு வந்த நபர்கள் ஏராளமானோர் நேற்று அதிகாலையில் ஆரல்வாய்மொழியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள மையத்தில் சளி மாதிரிக்காக காத்திருந்தனர். அதில், மணமகனும் ஒருவர். அதாவது, நெல்லை மாவட்டம் கோட்டைவிளைப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும், குமரி மாவட்டம் கண்டன்குழியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
பரிசோதனைக்காக காத்திருந்த மணமகன்
இந்த திருமணம் மணப்பெண்ணின் வீட்டில் நடைபெறுவதாக இருந்ததால், மணமகன் உள்பட 14 பேர் 2 வேன்களில் நெல்லையில் இருந்து குமரிக்கு வந்தனர். சளி மாதிரி எடுக்க கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மணமகன் மற்றும் அவரது வீட்டார் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. மணமகளை மணமுடிக்க வந்தவர், சளி மாதிரி சேகரிப்பு மையத்திலேயே காத்திருந்ததால் மணமகனின் குடும்பத்தினர் ஒருவித பதற்றத்திற்கு உள்ளானார்கள்.
முகூர்த்த நேரம் முடிவதற்குள், மணப்பெண் இருக்கும் இடத்துக்கு சென்று விடலாமா?, குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாமா? என மணமகன் குடும்பத்தினர் பதற்றத்துடனே பேசிக்கொண்டிருந்தனர். கொரோனா பரிசோதனை முடிவடைந்ததும், மணமகன் வீட்டார் உடனடியாக கிளம்பி சென்றனர். பின்னர் அங்கு மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. கொரோனா கெடுபிடிக்கு இடையே திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த பிறகு தான் இருவீட்டாரும் நிம்மதி அடைந்தனர்.