குறும்பனை கடற்கரையில் மீன் வாங்க திரண்டவர்கள் சமூக இடைவெளியை மறந்ததால் பரபரப்பு

குறும்பனை கடற்கரையில் சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-28 01:07 GMT
குளச்சல், 

குறும்பனை கடற்கரையில் சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை ஒழுங்கு படுத்தினர்.

மீன் விற்பனை

கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக குளச்சல், குறும்பனை பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கட்டுமர மீனவர்கள் மட்டும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்த மீன்களை பஸ் நிலையத்தில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குளச்சல் அருகே குறும்பனை மீனவ கிராமத்தில் மீன் விற்பனை செய்ய பஸ் நிலைய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு மக்கள் சமூக இடைவெளியில் நின்று மீன்களை வாங்கி செல்ல கட்டங்கள் போடப்பட்டிருந்தது. இதில் மக்கள் வரிசையாக நின்று மீன்களை வாங்கி சென்றனர்.

கூட்டமாக மீன் வாங்க ஆர்வம்

இந்தநிலையில், நேற்று பஸ் நிலையத்திற்கு பதில் குறும்பனை கடற்கரையில் ஏலக்கூடம் அருகே மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. அங்கு மீன் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக மீன் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் குறும்பனை பங்குதந்தை கஸ்பருடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன் வாங்கி செல்ல அறிவுறுத்தினர். அதன்பின்பு, பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிறுத்தி மீன் விற்பனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்