மும்முனை மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை வேளாண்மை உற்பத்தி ஆணையர் பேச்சு
மும்முனை மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசினார்.
தஞ்சாவூர்,
மும்முனை மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. குடிமராமத்து பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் கண்காணிப்பு அலுவலர்களான தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு தலைவர் சத்யகோபால், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள், மேட்டூர் அணை மற்றும் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பாக தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நடப்பாண்டு விடுபட்ட பணிகளை அடுத்த ஆண்டு குடிமராமத்து பணியில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மும்முனை மின்சாரம்
மேலும் அவர்கள், 18 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் உடனே வழங்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான குறுவை, சம்பா, தாளடி பருவத்திற்கு பயிர்க் காப்பீட்டு தொகை விரைந்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பின்னர் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசும்போது, தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விடுபட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் வரும் ஆண்டுகளில் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.
மும்முனை மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு இணைப்பதிவாளர், முன்னோடி வங்கி மேலாளருக்கு தக்க அறிவுரை வழங்கப்படும் என்று கூறினார்.