பந்தல் காய்கறி சாகுபடிக்கு மானியம் வழங்க வேண்டும் உடுமலை விவசாயிகள் கோரிக்கை

பந்தல் காய்கறி சாகுபடிக்கு முன்னதாகவே மானியம் வழங்க வேண்டும் என உடுமலை விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2020-05-27 21:49 GMT
போடிப்பட்டி,

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு தக்காளி, வெங்காயம், பீட்ரூட் போன்ற காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் பீர்க்கன், புடலை, பாகற்காய் போன்ற பந்தல் காய்கறிகள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்படுகிறது.

காய்கறிகள் சாகுபடிக்கு பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே உடுமலை பகுதி விவசாயிகளின் நலன் கருதி பந்தல் மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ரூ.2 லட்சம் செலவு

உடுமலை பகுதியில் பந்தல் காய்கறிகள் சாகுபடி குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. இதனால் வரத்து குறைந்து எல்லா சீசனிலும் நல்ல விலை கிடைக்கிறது. கல் தூண்கள் பயன்படுத்தி காய்கறி பந்தல் அமைக்க பெரும் பொருட்செலவு ஆகிறது. அதாவது ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க சுமார் 140 கல்தூண்களும் 850 கிலோ கம்பியும் தேவைப்படும்.

இதுதவிர பந்தல் அமைப்பதற்கான கூலி உள்ளிட்ட செலவுகளும் உள்ளது. அந்த வகையில் ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ரூ.2 லட்சம் வரை செலவு பிடிக்கும். இதில் 70 சதவீதம் அளவுக்கு அரசு மானியமாக வழங்கினால் உதவியாக இருக்கும். ஏனென்றால் ஒரு முறை பந்தல் அமைத்துவிட்டால் சுமார் 30 ஆண்டுகள் வரை அதனைப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பாகும். மேலும் இதற்கு முந்தைய காலங்களில் பந்தல் மானியம் வழங்கும்போது விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் பந்தல் அமைத்து அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் அதிகாரிகள் கள ஆய்வு செய்து பரிந்துரை செய்வர். அதன் பிறகே மானியத்தொகை விவசாயிகளுக்கு வந்து சேரும்.இதனால் சாமானிய விவசாயிகள் இந்த திட்டத்தில் பலன் பெறமுடியாத நிலையே இருந்து வந்தது.

மானியம் வழங்க வேண்டும்

எனவே இனி வரும் காலங்களிலாவது ஏழை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் முன்னதாகவே பந்தல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை பகுதியில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் பந்தல் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பந்தல் மானியம் வழங்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

தற்போது குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு பந்தல் மானியம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கூடுதல் விவசாயிகளுக்கு பந்தல் மானியம் வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்