குஜராத்தில் இருந்து அரியலூர் வந்தவருக்கு கொரோனா பச்சை மண்டலத்திற்குள் வருகிறது பெரம்பலூர்
குஜராத்தில் இருந்து அரியலூர் வந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லாததால் பச்சை மண்டலத்திற்கு மாற வாய்ப்புள்ளது.
அரியலூர்,
குஜராத்தில் இருந்து அரியலூர் வந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லாததால் பச்சை மண்டலத்திற்கு மாற வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 356 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 350 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 6 பேரில், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 பேரும் குணமடைந்ததால், அவர்களும் நேற்று வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் சென்னை முகப்பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து அரியலூருக்கு வந்த 58 வயதுடைய ஆண் ஒருவருக்கு கடந்த 22-ந் தேதி சுகாதாரத்துறையினர் சளி, மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து அனுப்பினர். நேற்று பரிசோதனை முடிவு வந்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 78 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 139 பேரில், 135 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 4 பேரில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், 2 பேரும், கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்ததால், அவர்கள் 3 பேரும் நேற்று வீடு திரும்பினர்.
இதனால் கொரோனா வைரசால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரசவித்த பெண் மட்டுமே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் குணமடைந்து வருவதால் இன்று (புதன் கிழமை) மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ஆக அதிக வாய்ப்புள்ளதாகவும், அந்த பெண்ணும் வீடு திரும்பினால் பெரம்பலூர் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி பச்சை மண்டலத்தில் இடம் பெறும் என்று மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே சளி மாதிரி எடுக்கப்பட்டு, முடிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது.