விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்வதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்வதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-27 05:40 GMT
கரூர், 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்வதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை, மத்திய அரசு ரத்து செய்வதை கண்டித்து கரூர் மாவட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜோதிமணி எம்.பி. கலந்து கொண்டார். இதில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளில் மோடி அரசு விவசாயிகளுக்காக எவ்வித நிதி ஆதாரத்தையும், உள் கட்டமைப்பையும் ஏற்படுத்த வில்லை. விவசாயிகளே இந்த நாட்டின் முதல் சொத்து என உணர்ந்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாய கடன் ரூ.75 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. ஆனால் மோடி அரசு, கொரோனா காலத்திலும் 5 கார்ப்பரேட் நண்பர்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடி கடனை விட்டுக்கொடுக்கிறது, என்றார்.

இதேபோல் தாந்தோணிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏர் கலப்பை மற்றும் பசுந்தீவனங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம்

புன்செய்புகளூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேலாயுதம்பாளையத்தில் வங்கிகள் முன்பும், புன்செய்புகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புன்செய்புகளூர் நகர காங்கிரஸ் தலைவர் கமல் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.

லாலாபேட்டை, குளித்தலை

கிருஷ்ணராயபுரம் வட்டார காங்கிரஸ் சார்பில் கோவக்குளம் ராஜேந்திரன் தலைமையில் லாலாபேட்டை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்று கோஷம் போட்டனர். கிருஷ்ணராயபுரம் தனியார் வங்கி முன்பும், மாயனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பும், பஞ்சப்பட்டியில் உள்ள வங்கி முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளித்தலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி

பள்ளப்பட்டி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பள்ளப்பட்டியில் தபால் நிலையம் மற்றும் துணை மின் நிலையம் முன்பும், பேரூராட்சி அலுவலகம் முன்பும், அரவக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமதுஜக்காரியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

க.பரமத்தி

க.பரமத்தி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜ் குமார் தலைமையில் க.பரமத்தி தபால் நிலையம், மின்வாரிய அலுவலகம் மற்றும் முன்னூர் தபால் நிலையம், குப்பம் தபால் நிலையம், அஞ்சூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்