மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நாசம் மின்கம்பங்கள் முறிந்ததால் இருளில் மூழ்கிய கிராமங்கள்
தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசம் ஆகின. மின்கம்பங்கள் முறிந்ததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் ஆண்டிப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நூற்றுக் கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசம் ஆகின. இன்னும் சில நாட்களில் வாழைத்தார்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. ஆனால், பலத்த காற்றுக்கு அவை முறிந்து விழுந்தன.
தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, அ.ரெங்கநாதபுரம், அ.வேலாயுதபுரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி ஆகிய இடங்களிலும் பலத்த காற்று வீசியது. இதனால், இந்த கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கு மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
மின்தடை
அதுபோல், வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், இந்த கிராம பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 500-க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள் முறிந்து நாசம் ஆகின. மேலும் 5 மின்கம்பங்களும் முறிந்தன. அதிர்ஷ்டவசமாக அப்போது மின்தடை ஏற்பட்டு இருந்தது. இதனால், மின்சார விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், மின்கம்பங்கள் முறிந்ததால் பசுமலைத்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள வருசநாடு, தங்கம்மாள்புரம், ஓட்டணை உள்ளிட்ட 50-க் கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நேற்று பகலில் மின்சார வினியோகம் சீரானது. பலத்த காற்றால் வாழை, தென்னை மரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.