மாவட்டத்தில் 38 இடங்களில் கருப்பு கொடியுடன் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-27 05:23 GMT
தேனி, 

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் தேனி, போடி, கம்பம், பழனிசெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்பட 38 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் கருப்பு கொடியை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். போடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் முசாக்மந்திரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் போஸ் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதுபோல் மற்ற இடங்களிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை ரத்து செய்யக்கூடாது. ரத்து செய்வது தொடர்பான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வர்த்தகர் காங்கிரஸ்

இதேபோல் தேனி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் பெரியகுளம் சாலையில் பெத்தாட்சி விநாயகர் கோவில் அருகில் ஆகிய 2 இடங்களில் தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய பயன்பாட்டுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்றும், இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர்கள் கண்ணுச்சாமி, தஸ்லீம், ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்