பெங்களூருவில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த 72 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர் கலெக்டர் நேரில் ஆய்வு
பெங்களூருவில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த 72 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப் படுவதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
செம்பட்டு,
பெங்களூருவில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த 72 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப் படுவதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
72 பயணிகள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று இரவு 8.15 மணிக்கு திருச்சிக்கு வந்த விமானத்தில் 72 பயணிகள் வந்தனர். அவர்களுக்கு, தமிழக அரசின் மருத்துவ துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி மருத்துவ அலுவலர் ஜெகநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனைக் காக சளி மாதிரிகளை சேகரித்தனர்.பின்னர், அவர்களில் 21 பேர் தனியார் விடுதிக்கும் மற்றவர்கள் சேதுராப்பட்டி கல்லூரியில் உள்ள சிறப்பு முகாமுக்கும் தனிமைப்படுத்த பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், 72 பேரும் அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். இந்த சோதனையை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்து மருத்துவ குழுவினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
கொரோனா இல்லை
இதற்கிடையே நேற்று முன் தினம் இரவு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 65 பயணிகள் வந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி ஆனது. இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் 14 நாட்கள் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.