ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்

ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தை நடத்தினர்.

Update: 2020-05-27 05:03 GMT
திருச்சி, 

ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தை நடத்தினர்.

கோவில்கள் மூடல்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே, கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.

இதனால் கோவில்களில் தினமும் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் குறிப்பிட்ட வேளையில் நடந்து வருகிறது. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த பங்குனி, சித்திரை மாதம் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், தேரோட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டன.

தோப்புக்கரணம் போட்டு போராட்டம்

இந்தநிலையில் ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள் அனைத்திலும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடவும் அனைத்து கால பூஜை நடக்க வேண்டியும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் முன் தோப்புக்கரணம் போடும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் முன் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு கோஷம் எழுப்பினர்.

இதுபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கோபுரம் முன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் முன் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தலைமையிலும், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் முன் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடந்தது.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் கோட்ட செயலாளர் குணா தலைமையிலும், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவிலில் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி தலைமையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு ஒன்றிய பொறுப்பாளர் கந்தசாமி தலைமையிலும் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் தோப்புக்கரணம் போட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி கோவில், அரியமங்கலம் உலகநாத சுவாமி கோவில், இ.பி.ரோட்டில் உள்ள பூலோகநாதர் கோவில் உள்பட அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்