சாலை வரியை ரத்து செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை வாடகை கார் உரிமையாளர்கள் முற்றுகை
சாலை வரியை ரத்து செய்யக்கோரி வாடகை கார் உரிமையாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
நெல்லை,
சாலை வரியை ரத்து செய்யக்கோரி வாடகை கார் உரிமையாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
வாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நல முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடகை கார்களுக்கு 6 மாதத்துக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாநில தலைவர் சந்தோஷம் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
இந்த போராட்டத்தில் வாடகை கார் உரிமையாளர்கள், டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தி இருந்தனர்.
சாலை வரி ரத்து
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அனைத்து வாடகை வாகனங்களுக்கும் 6 மாதத்துக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வாகனத்துக்கும் 6 மாதத்துக்கு காப்பீட்டுத்தொகையை நீட்டித்து தரவேண்டும். அனைத்து டிரைவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வங்கி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் டிரைவர்கள் வாங்கிய கடன் தொகையை 6 மாதத்துக்கு வசூலிக்கக்கூடாது. வாடகை கார்களுக்கும் இ-பாஸ் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.