கொரோனா தடுப்பு பணி உபகரணங்கள் கேட்டு போராடிய தூய்மை பணியாளர் இடமாற்றத்துக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா தடுப்பு பணி உபகரணங்கள் கேட்டு போராடிய தூய்மை பணியாளர் இடமாற்றத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-05-27 02:36 GMT
மதுரை, 

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் காந்திநகரை சேர்ந்தவர் பாலு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த 32 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். ராமநாதபுரம் நகராட்சியில் 90 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 100-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தூய்மை பணியாளர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர். உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் ராமநாதபுரம் நகராட்சியில் எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான முககவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

நான் தூய்மை பணியாளர்களின் சங்க தலைவராக இருப்பதால், எங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக என்னை 2 நாட்களில் அதாவது, 28.4.2020 அன்று, ராமநாதபுரம் நகராட்சியில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்தனர். உரிய உபகரணங்கள் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக என்னை இடமாற்றம் செய்துள்ளனர். தற்போது எனக்கு 55 வயதாகிறது. எனது மனைவி, பிள்ளைகள் ராமநாதபுரத்தில் உள்ளனர். இங்கிருந்து தினமும் உசிலம்பட்டி சென்று வர 350 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இதனால் என் உடல் நிலை பாதிக்கப்படும். எனவே என்னை இடமாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி நிஷாபானு விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் திருமுருகன் ஆஜராகி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தூய்மை பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உரிய உபகரணங்களை அவர்கள் கேட்காமலேயே வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதை கேட்டதற்காக இடமாற்றம் செய்வது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்