பாகனை சுவரில் அடித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோவில் யானையை வனப்பகுதியில் விட வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
பாகனை சுவரில் அடித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விடவேண்டும் என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டி யானையாக தெய்வானை வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி யானை பாகன்கள் கணபதி முருகன் (50), கனகு சுந்தரம் (38) ஆகிய 2 பேரையும் யானை தெய்வானை தாக்கியது. இதில் கணபதி முருகன் கால் முறிந்து பணி செய்ய முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளார்.
சில மாதங்கள் கழித்து பாகனின் உதவியாளர் சிதம்பரத்தையும் தெய்வானை தாக்கியது. இவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி மாலையில் குளிப்பாட்ட அழைத்துச் சென்ற துணை பாகன் காளஸ்வரனை தெய்வானை சுவரில் தூக்கி அடித்து கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஊரடங்கினால் கோவில் மூடப்பட்டுள்ளதால் பெரிய பாதிப்பு இல்லை.
வனப்பகுதியில் விட வேண்டும்
இந்த நிலையில் யானை தெய்வானையால் மீண்டும் விபரீதம் ஏற்படக்கூடாது என்பதால் ஆக்ரோஷத்தில் உள்ள தெய்வானையை சாந்தப்படுத்துவதோடு அதற்கு உரிய பாதுகாப்பு இடமான வனப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.