தாராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: பண்ணையில் மேற்கூரை சரிந்து விழுந்து 3 ஆயிரம் நாட்டு கோழிகள் செத்தன
தாராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோழிப்பண்ணையின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 3 ஆயிரம் நாட்டு கோழிகள் செத்தன.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சத்திரம், கோவிந்தாபுரம், கவுண்டச்சிபுதூர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6 மணிக்கு மேல் வானில் கருமேக கூட்டங்கள் ஒன்று கூடின. மாலை 6.30 மணிக்கு மேல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்ட தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் கோர தாண்டவமும், மழையின் வேகமும் அதிகமானது.
இதனால் கோவிந்தாபுரம், சத்திரம், கவுண்டச்சிபுதூர், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்த தென்னை, வேம்பு, தேக்கு, வேலமரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் காற்றில் சாய்ந்தன. அதுபோன்று தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் கோவிந்தாபுரம் அருகே மரம் ஒன்று ரோட்டில் சாய்ந்து விழுந்தது. இதனால் தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்கம்பங்கள் சாய்ந்தன
தாராபுரம் அருகே உள்ள மாந்தியாபுரத்தில் மாடுகளுக்கு தீவனம் கொடுக்க அடுக்கி வைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போர்கள் காற்றில் பறந்தன. சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. தொப்பம்பட்டி பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
3 ஆயிரம் நாட்டு கோழிகள் செத்தன
தாராபுரம் அருகே தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காளியப்பகவுண்டன் புதூரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அதில் 9 ஆயிரம் நாட்டு கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் கோழிப்பண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 3 ஆயிரம் நாட்டு கோழிகள் செத்தன.
இந்த நிலையில் நேற்று காலை கோழிப்பண்ணைக்கு வந்த கந்தசாமி மேற்கூரை இடிந்து கோழிகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றினார். அதில் இறந்த 3 ஆயிரம் நாட்டு கோழிகளை அப்புறப்படுத்தினார். காயம் அடைந்த நாட்டு கோழிகளை மீட்டு அதற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். சூறாவளி காற்றில் கோழி பண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 ஆயிரம் நாட்டு கோழிகள் செத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.