விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக மாவட்டம் முழுவதும் விரிவான முன்னேற்பாடுகள் - கலெக்டர் தகவல்

விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-05-27 00:12 GMT
திருவண்ணாமலை,

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பள்ளிகளில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. இந்த 10 பள்ளிகளிலும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 821 விடைத்தாள்கள் 1,420 ஆசிரியர்களை கொண்டு மொத்த 2,500 பணியாளர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னர் பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கும் பள்ளிகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் நாளொன்றுக்கு முற்பகல் 12 விடைத்தாள்களும், பிற்பகல் 12 விடைத்தாள்களும் திருத்த வேண்டும். விடைத்தாள்கள் திருத்தும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரையில் நடக்கும்.

விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் முழுவதும் 25 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு பஸ்சுக்கு 25 முதல் 30 ஆசிரியர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். பஸ் இயக்கப்படுவதற்கு முன்பாகவும், இயக்கப்பட்ட பின்பும் நாளொன்றுக்கு நான்கு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

பஸ்களுக்கு வரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தங்களுடைய விடைத்தாள்கள் திருத்துவதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அதனை பஸ் நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். அவர்கள் தங்களுடன் துணைக்காக ஒருவரை அழைத்து வர வேண்டிய பட்சத்தில் அவர்களும் பஸ்சில் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மாற்றுத்திறனாளிகளாக உள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகளில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் உடன் ஒருவரை அழைத்து வருவதற்கு அனுமதியளிக்கப்படும். ஆசிரியர்களுடன் வரும் உடனாளர்கள் பள்ளி வளாகத்திலேயே தனி அறையில் சமூக விலகலின் படி அமர வைக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக 7 துணை மதிப்பீட்டு முகாம்களில் விடைத்தாள்கள் திருத்தும் மையமாக இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கும் 10 பள்ளிகளும் உள்ளாட்சி அமைப்புகளால் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்.

இந்தப் பள்ளிகளில் உள்ள 210 விடைத்தாள்கள் திருத்தும் அறைகளில் உள்ள மேசைகள், நாற்காலிகள், கதவுகள், ஜன்னல்கள், கைப்பிடிகள் உள்ளிட்ட அனைத்தும் தினசரி காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆரம்பிப்பதற்கு முன்னரும், ஆரம்பித்த பின்னரும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இந்தப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள், குடிநீர் பருகும் இடங்கள், உணவு அருந்தும் இடங்கள் ஆகியவை அவ்வப்போது தூய்மைப் பணியாளர்களால் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

இந்தப் பள்ளிகள் அனைத்திலும் நுழைவு வாயிலிலும் ஒவ்வொரு விடைத்தாள்கள் திருத்தும் அறைக்கு முன்பாகவும் கைகளுக்கான சானிடைசர்கள் கண்டிப்பாக பள்ளிக் கல்வித்துறையால் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் நுழைவு வாயிலில் வாஷ் பேசின் மற்றும் சோப்பு கை கழுவுதற்காக வைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு ஆசிரியரும் அல்லது உடனாளர்களும், பிற அலுவலர்களும் கைகளை கழுவாமல் பள்ளிக்குள் அனுமதிக்கப்படக் கூடாது.

விடைத்தாள்களை திருத்துவதற்கு முன்பாகவும், திருத்தி முடித்த பின்பும் ஆசிரியர்கள் தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கான பிரத்தியேகமாக தூய்மைப் பணியாளர்கள் விடைத்தாள்கள் பணி முடிவடையும் வரையில் நியமிக்கப்பட்டு தூய்மைப்பணிகளை தினசரி மேற்கொள்வார்கள்.

விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வருகை தரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் முகக் கவசம் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும். இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சமூக விலகலை பின்பற்றி ஒவ்வொரு அறையிலும் 8 ஆசிரியர்கள் மட்டுமே விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்