திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் செல்ல சைக்கிளில் வந்த வாலிபர்களை ரெயிலில் அனுப்பிய போலீசார்
திருவனந்தபுரத்திலிருந்து பீகார் செல்வதற்காக சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை திருப்பூரில் போலீசார் தடுத்து நிறுத்தி ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்,
நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் பீகார் மாநிலம் கோரக்பூரை சேர்ந்த சதார்ஜித் (வயது 26), பிரசாந்த் குமார் குப்தா(27) ஆகிய இருவரும் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்கள் பீகாருக்கு சைக்கிளிலேயே செல்ல முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் 2 புதிய சைக்கிள் களை விலைக்கு வாங்கினர்.
கடந்த 23-ந் தேதி இருவரும் சைக்கிளில் பீகாருக்கு புறப்பட்டனர். நேற்று மாலை திருப்பூரை வந்தடைந்தனர். சைக்கிளில் வந்த களைப்பில் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மரத்தடியில் படுத்து தூங்கினர். அப்போது அங்கு வந்த திருப்பூர் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கணேஷ்குமாருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
ரெயிலில் அனுப்பிவைப்பு
இதனால் அந்த வாலிபர் களிடம் விசாரணை நடத்தினார். இதில் அந்த வாலிபர்கள் பீகாருக்கு சைக்கிளில் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ்குமார் திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபுவிற்கு தகவல் தெரிவித்து அந்த வாலிபர்களுக்கு உதவுமாறு கேட்டார். பின்னர் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் வேலாயுதம் ஆகியோர் ரெயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த வாலிபர்களுக்கு பீகார் செல்ல ஏற்பாடு செய்தனர். நேற்று இரவு 8 மணிக்கு பீகாருக்கு புறப்பட்ட ரெயிலில் இந்த வாலிபர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த வாலிபர்களுக்கு வடக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் நுண்ணறிவு பிரிவு போலீசார் பாலகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் பண உதவிகளை கொடுத்து அனுப்பினர்.