நீடாமங்கலத்தில், குடிமராமத்து பணிகள் சிறப்பு அதிகாரி ஆய்வு
நீடாமங்கலத்தில், குடிமராமத்து பணிகளை சிறப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி நேற்று ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலத்தில், குடிமராமத்து பணிகளை சிறப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி நேற்று ஆய்வு செய்தார்.
குடிமராமத்து பணி
திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 106 சிறப்பு தூர்வாரும் பணிகள் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள காவிரி வடிகால் ரூ.26 லட்சம் மதிப்பிலும், கோரையாறு ரூ.8 லட்சம் மதிப்பிலும், கடம்பூர் வடிகால் ரூ.12 லட்சம் மதிப்பிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை குடிமராமத்து பணிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியும், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சிதுறை முதன்மை செயலாளருமான ராஜேஷ் லக்கானி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், சிறப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
கொண்டியாறு
இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள கொண்டியாறு பகுதியில் பரப்பனாமேடு மன்னப்பன் வாய்க்கால், வீரவநல்லூர் வடிகால் வாய்க்கால், பரப்பனாமேடு வாய்க்கால், கடம்பூர் வாய்க்கால் உள்ளிட்டவற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை பொறியாளர் கனகரத்தினத்திடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ, மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.