கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம் திருவாரூரில் நடந்தது
கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்கள் மூடல்
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி டீக்கடைகள், சலூன் கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கி விட்டது. ஆனால் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு எந்தவித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
நூதன போராட்டம்
இக்கட்டான காலத்தில் மக்கள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால் தற்போது அவ்வாறு கோவில்களுக்கு செல்ல முடியாததால் பக்தர்கள் பலர் மனவேதனையில் உள்ளனர். இந்த நிலையில் கோவில்களை திறந்து பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருவாரூரில் நூதன போராட்டம் நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி நகர தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
இதில் துணை தலைவர் செந்தில், நிர்வாகிகள் கணேசன், ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்து முன்னணியினர் கோவில் முன்பு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டனர். போராட்டத்தின்போது கோவில்களை உடனடியாக திறந்து பக்தர்கள் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.