மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு பி.ஆர்.பாண்டியன் பேட்டி
மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி விரைவில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மன்னார்குடி,
மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி விரைவில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
18 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்
இதுகுறித்து நேற்று அவர் மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் காவிரி மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. தமிழக உணவு பொருள் தேவையில் சுமார் 40 சதவீதம் டெல்டாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் 11 மாநகராட்சிகள் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
மேட்டூர் அணை உபரி நீர் திட்டம்
காவிரி உரிமைக்காக 50 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்கும் வகையில் தமிழக பொதுப்பணித்துறை மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் என்ற பெயரில் 4 புதிய நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேட்டூர் அணை முதல் கிருஷ்ணராஜ சாகர் வரை கர்நாடகமோ, தமிழகமோ புதிய நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த கூடாது.
காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து அணைகளின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எதுவாக இருந்தாலும் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். கீழ்பாசன விவசாயிகளின் கருத்தறியாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க முடியாது. இதன் மூலம் காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறும் வகையில் அவமதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசே ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக கர்நாடகம் மேகதாது அணை கட்டும் நடவடிக்கைக்கு தமிழக அரசு மறைமுகமாக துணை போகிறதோ? என அஞ்ச தோன்றுகிறது.
காவிரி டெல்டா அழிந்து போகும்
குடிநீர் திட்டம் என்ற பெயரில் மேட்டூர் அணையில் இருந்து இறைவை பாசனம் மூலம் தண்ணீரை எடப்பாடி தொகுதி உட்பட சேலம் மாவட்டத்திற்கு நீரேற்று திட்டம்(பம்பிங் ஸ்கீம்) மூலம் பெரும் பகுதியான நீரை கொண்டு செல்ல உள்ளனர். அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளனர்.
புதிய பாசனப் பரப்பை உருவாக்கி தோட்டப்பயிர் சாகுபடியை தீவிரப்படுத்த உள்ளனர். ஏரி குளங்களை நிரப்பி காவிரி டெல்டாவை முடக்கும் வகையில் பிராந்திய உணர்வோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி இப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்த பணி நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழிந்து போகும். விவசாயம் பேரழிவை சந்திக்கும். 5 கோடி மக்களின் குடிநீர் தேவையும் பறிபோகும். டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும்.
ஐகோர்ட்டில் வழக்கு
எனவே டெல்டா விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிட முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விரைவில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கிறேன்.
காவிரி டெல்டாவை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து காவிரி டெல்டாவை பாதுகாக்க முன்வர வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.