தகுதியான விவசாயிகளுக்கு கடன் உறுதி - அதிகாரிகளுக்கு, மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவு
தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் அத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.டி.சோமசேகர் பேசும்போது கூறியதாவது:-
“கர்நாடகத்தில் 21 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் செயல் படுகின்றன. அந்த வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடு புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு என்றே தனியாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
கலபுரகி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.92 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் அங்கு நிர்வாக குழுவை கலைத்துவிட்டு, நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்வது நல்லது. சிவமொக்காவில் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.62.72 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதன் வட்டியே ரூ.59 கோடி. இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட கூட்டுறவு வங்கி இன்னும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும். தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.”
இவ்வாறு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேசினார்.