கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 3,200 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள் கலெக்டர் ராஜாமணி தகவல்

கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 3,200 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Update: 2020-05-26 22:15 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி உஷா உடன் இருந்தார். பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி 11 மையங்களில் நாளை முதல் (இன்று) தொடங்குகிறது. இந்த பணியானது கோவை கல்வி மாவட்டத்தில் பாரதி மெட்ரிக் பள்ளி, அவிலா மெட்ரிக் பள்ளி, சிந்தி வித்யாலயா, நேரு வித்யாலயா, லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 5 மையங்களில் நடக்கிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பி.கே.டி.மெட்ரிக் பள்ளி, சிவாலிக் மெட்ரிக் பள்ளி, சுபாஷ் மெட்ரிக் பள்ளி, பி.வி.என்.மெட்ரிக் பள்ளி என 4 மையங்களில் நடக்கிறது. அதுபோன்று எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் பிர்லியன்ட் மெட்ரிக் பள்ளி, மான்சிஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி என 2 மையங்கள் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

3,200 பேர் ஈடுபடுகிறார்கள்

இந்த பணியில் 375 முதன்மை தேர்வாளர்கள், 375 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 2,250 உதவித் தேர்வாளர்கள் மற்றும் 200 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 3,200 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை கொண்டு அனைத்து கட்டுப்பாடுகளுடன் பணி மேற்கொள்ளப்பட்ட உள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு அனைத்து வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும், ஒரு நாளைக்கு இரு முறை கிருமிநாசினிகள் தெளித்திடவும், பிளீச்சிங் பவுடர், சானிடைசர் மூலம் கழிவறைகளை 4 முறை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளி

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் கோவை மாவட்டத்தை சேர்ந்த 1,650 ஆசிரியர்கள் எவ்வித சிரமமின்றி மையங்களுக்கு சென்று பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக 44 வழித்தடங்களில் 74 பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர்களை ஒருங்கிணைக்க பஸ்களுக்கு தலா ஒருவர் வீதம் 74 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மற்றும் கை கழுவும் திரவம் வழங்க முன்னெற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு வகுப்பறைக்கு ஒரு முதன்மைத்தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவித் தேர்வாளர்கள் என 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

போலீசார் பாதுகாப்பு

மேலும் அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு தலா 2 போலீசார் வீதம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பாதுகாப்பு அளிக்க மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு மூலம் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையங்களில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு கண்காணிக்க முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரிகள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரதுறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்