பட்டாபிராம் அருகே ரவுடிக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது
பட்டாபிராம் அருகே ரவுடியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). ரவுடியான இவர் மீது பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுரேஷ் நேற்று முன்தினம் இரவு போதையில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ டிரைவருடன் தகராறில் ஈடுபட்டதுடன், வேகமாக சென்ற அந்த ஆட்டோவை தனது நண்பர்களுடன் விரட்டிச்சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.இதை அங்கிருந்த 4 பேர் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 4 பேரும் சுரேசை கல்லால் தாக்கியதுடன், அரிவாளால் அவரது தலை, முகம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பயந்துபோன சுரேஷின் நண்பர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சுரேஷ், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் அடுத்த அன்னம்பேடு பகுதியை சேர்ந்த பரத்(30), பார்த்திபன்(24), பிரதீப் (24), பன்னீர்செல்வம் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வக்குமார் (26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.