மேலும் 10 பேருக்கு உறுதி: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 187 ஆக உயர்வு - நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக தொற்று இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்து உள்ளது. நெல்லை, தென்காசியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

Update: 2020-05-26 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த சில வாரங்களாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் மாவட்ட எல்லைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

10 பேருக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த 8 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் எட்டயபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 76 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை-தென்காசியில் தொற்று இல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று யாருக்கும் தொற்று இல்லை. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. அங்கு இதுவரை 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு நேற்று வந்த மேலும் 32 பேருக்கு தொற்று அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்