தாரை, தப்பட்டைகளுடன் ஊர்வலமாக வந்த நாட்டுப்புற கலைஞர்கள் - 94 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
60 நாட்களுக்கும் மேலாக சுப நிகழ்ச்சிகள் ரத்தானதால் வருமானமின்றி தவித்த நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரணம் வழங்கக்கோரி தாரை தப்பட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
வேலூர்,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் சாமி ஊர்வலம், கோவில் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை எவ்வித ஆடம்பரமும் இன்றி எளியமுறையில் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டுப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 60 நாட்களுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால் அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று காலை வாகனங்கள் மூலம் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக அங்கிருந்து தாரை, தப்பட்டைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். நாட்டுப்புற கலைஞர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், 144 தடை உத்தரவை மீறியும் ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 94 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அழைத்து சென்றனர்.
நாட்டுப்புற கலைஞர்கள் அளித்த மனுவில், “ஊரடங்கால் 2 மாதங்களாக கோவில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. எளியமுறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதன்காரணமாக கோவில் திருவிழா, சுபநிகழ்ச்சிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் நாட்டுப்புற கலைஞர்களாகிய நாங்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம்.
நலவாரிய உறுப்பினர்களுக்கும், வாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண உதவியாக மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறினார்.