கோபி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

கோபி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. அந்தியூரில் வெற்றிலை கொடிக்கால்கள் சேதம் அடைந்தது.

Update: 2020-05-26 06:17 GMT
கடத்தூர்,

ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் ரோட்டில் நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இரவு நேரத்தில் தூங்கும்போது மின்விசிறியில் இருந்து வரும் வெப்ப காற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

அதேபோல் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதன்பின்னர் இரவு 10 மணிக்கு மழைபெய்யத்தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது. அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆலாங்காட்டுப்புதூர், கடுக்காம்பாளையம், பரமக்காட்டூர் மற்றும் குட்டியாக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை விற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தோம். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் வாழைத்தார்கள் ஏலம் நடந்து வருகிறது. இதனால் வாழைத்தார்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வந்தது. மொந்தன், கதலி, தேன்வாழை, பூவன், செவ்வாழை போன்ற வாழைகள் நன்கு விளைந்து இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில் சூறாவளிக்காற்று வீசியதில் வாழைகள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துவிட்டன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தனிநபர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டுகிறோம்’ என்றனர்.

இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் நகலூர், பெருமாபாளையம், செம்புளிச்சாம்பாளையம், காட்டுப்பாளையம், பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் வெற்றிலை கொடிக்கால்கள் சாய்ந்தன.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழைத்தோட்டம் மற்றும் வெற்றிலை தோட்டத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசின் நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். புதுக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்