ஊரடங்கால் பள்ளிவாசல்கள் மூடல்: வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் கொண்டாட்டம்
ஊரடங்கால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.
பெரம்பலூர்,
ஊரடங்கால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரம்ஜான். இதனை முஸ்லிம்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி வாசல்களும் மூடப்பட்டதால் ரமலான் மாத பிறப்பையொட்டி முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே நோன்பு திறந்து தொழுகை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பிறை தென்பட்டதால் தமிழகத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஊரடங்கு உத்தரவினால் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் தொழுகை நடத்தப்படவில்லை. வழக்கமாக, பெரம்பலூரில் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்திலும், அரியலூரில் ஜும்மா பள்ளிவாசலிலும் முஸ்லிம்களால் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவினால் அந்த பகுதிகளிலும், 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வீடுகளில் சிறப்பு தொழுகை
இதனால், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளிலும், வீட்டின் மொட்டை மாடியிலும் சிறப்பு தொழுகை நடத்தினர். வீடுகளில் காலை 7 மணிக்கு நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சில இடங்களில் பக்கத்து வீடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது சிறுவர்-சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் ஏழைகளுக்கு உதவி செய்து மகிழ்ந்தனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து முஸ்லிம்கள் சிலர் கூறுகையில், தற்போது ஊரடங்கு உத்தரவினால் எந்த ஆண்டும் இல்லாதது போல் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு பள்ளி வாசல்கள், திறந்த வெளியில் சிறப்பு தொழுகை நடத்த முடியாததால் வீடுகளிலேயே தொழுகை நடத்தினோம். வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தியதால் ரம்ஜான் பண்டிகை கொண்டாடியது போல் தெரியவில்லை என்றனர்.
லெப்பைக்குடிகாடு
இதேபோல லெப்பைக்குடிகாடு, ரஞ்சன்குடிக்காடு, தேவையூர், வாலிகண்டபுரம் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களும் தங்களது வீடுகளிலேயே குடும்பத்துடன் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.