ஊரடங்கால் பள்ளிவாசல்கள் மூடல்: வீடுகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை
ஊரடங்கால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்தில் முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தேனி,
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் திகழ்கிறது. ரமலான் மாதத்தில் புனித நோன்பு கடைப்பிடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானம் ஆகியவற்றுக்கு ஊர்வலமாக சென்று தொழுகை நடத்துவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் பள்ளிவாசல்களும் மூடப்பட்டு உள்ளன. இதன்காரணமாக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாததால் தங்களின் வீடுகளிலேயே நோன்பு திறந்து வந்தனர்.
வீடுகளில் தொழுகை
நேற்று ரம்ஜான் பண்டிகை என்ற போதிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேனி மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஊர்வலம் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை எதுவும் நடத்தவில்லை. இருப்பினும், முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். தேனி, போடி, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம், தேவதானப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். வீட்டு வளாகம் மற்றும் மொட்டை மாடியில் தொழுகை நடத்தி, ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கம்பம் ஈத்கா மைதானம் ரம்ஜான் பண்டிகையன்று தொழுகை நடத்தும் முஸ்லிம்களால் நிரம்பி காட்சி அளிக்கும். ஆனால், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பலரும் தங்களின் வீடுகளில் சமைத்த பிரியாணியை நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.