ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா; பெண் போலீசுக்கும் தொற்று உறுதி

கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் பெண் போலீஸ் ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-05-26 05:41 GMT
கடலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 427 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 415 பேர் பூரண குணமடைந்து, வீடு திரும்பினர். மீதமுள்ள 12 பேர் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் 377 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்தம் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் 237 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கடலூர் முதுநகருக்கு வந்துள்ள 48 வயது ஆண், இவருடைய மனைவி, தாய் மற்றும் 8 வயதுடைய மகன் ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றொருவர் கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடியை சேர்ந்த 35 வயதுடைய பெண் போலீஸ் ஆகும். சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என 2 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 140 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

மேலும் செய்திகள்