பள்ளிவாசல்கள் மூடல்: வீட்டில் இருந்தபடியே ரம்ஜான் கொண்டாடிய முஸ்லிம்கள்
பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால் வீட்டில் இருந்தபடியே முஸ்லிம்கள் ரம்ஜானை கொண்டாடினர்.
கரூர்,
பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால் வீட்டில் இருந்தபடியே முஸ்லிம்கள் ரம்ஜானை கொண்டாடினர்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ரம்ஜான் அன்று முஸ்லிம் சமூகத்தினர் புத்தாடை அணிந்து பள்ளி வாசல்கள் மற்றும் ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடி சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கால் ரம்ஜானை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் கடந்த 30 நாட்களாக முஸ்லிம் மக்கள் பகலில் விரதம் கடைபிடித்து வந்தனர். நேற்று ரம்ஜான் பண்டிகை ஆகும். பள்ளி வாசல்களுக்கு தடையை மீறி முஸ்லிம் சமூகத்தினர் திரண்டு வந்துவிடாதபடி, கரூர் டவுன், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சிந்தாமணிபட்டி, மயிலம்பட்டி, வாங்கல், குளித்தலை, லாலாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டன.
வெறிச்சோடி கிடந்தது
இதில், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தக்கூடிய ஈத்கா மைதானம் நேற்று ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இதனால் முஸ்லிம்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே ரம்ஜான் தொழுகை மேற்கொண்டனர். சிலர் வீட்டின் மொட்டை மாடியில் மற்றும் வீட்டின் முன்புறத்தில் தொழுகை நடத்தினர்.
முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.